Thursday, June 24, 2010
நஷ்ட ஈடு விவகாரம்.... விஜய்க்கு சோதனை தீரவில்லை!
மதுரை: மழைவிட்டும் தூவானம் தொடரும் கதையாக, விஜய்யின் தோல்விப் பட நஷ்டம் குறித்து பேச்சு நடத்தி முடிவு காணப்பட்டதாகக் கூறியும் இன்னும் விவகாரம் தொடர்கிறது.
தொடர்ந்து 6 படங்கள் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு நடிகர் விஜய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மதுரை திரையரங்க உரிமையாளர்கள் இப்போது கொடிபிடிக்கத் துவங்கியுள்ளனர்.
மதுரையில் நேற்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியது:
நடிகர் விஜய் நடித்த 50-வது படம் சுறா தமிழகம் முழுவதும் திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை-ராமநாதபுரம் வினியோக பகுதியில் மொத்தம் 29 திரையரங்குகளில் சுறா படம் திரையிடப்பட்டது. விஜய்யின் 50-வது படம் என்பதால் இந்த திரைப்படத்தை அனைத்து திரையரங்கு நிர்வாகிகளும் அதிக விலை கொடுத்து வாங்கினோம். மதுரை நகரில் 6 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. ஆனால் அனைத்து இடங்களிலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
ரூ.1 கோடி நஷ்டஈடு...
விஜய் நடித்த அழகிய தமிழ்மகனைத் தொடர்ந்து வந்த குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா உள்பட 6 படங்களும் நஷ்டத்தையே ஏற்படுத்தி உள்ளன. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளார்கள். இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் அந்த படத்தில் நடித்த நடிகர், அந்த படத்தை எடுத்தவர்கள் என அனைவரும் சேர்ந்து, மதுரை-ராமநாதபுரம் திரையங்கு உரிமையாளர்களுக்கு சுமார் 90 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
ஏற்கனவே ரஜினி நடித்த குசேலன் , மணிரத்தினத்தின் இருவர், விஜய்யின் ஆதி படங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற சுறா படத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மாநில திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி உள்ளோம்.
விஜய்யின் அடுத்த படம் வெளியாவதற்குள் இந்த நஷ்டஈட்டை பெற்றுத் தரவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறி உள்ளோம். எனவே விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்..." என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment