Wednesday, June 30, 2010

பருத்தி வீரன்-தொடரும் வழக்கு



பருத்திவீரன் கன்னட,தெலுங்கு உரிமை விற்கப்பட்டு விட்டதா?-உயர்நீதிமன்றம் கேள்வி



பருத்தி வீரன் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட மொழி உரிமை விற்கப்பட்டு விட்டதா என்பதைத் தெரிவிக்குமாறு படத் தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இயக்குநர் அமீரின் சீரிய இயக்கத்தில் உருவான படம் பருத்தி வீரன். இப்படத்தை ஞானவேல்ராஜா என்பவர் தயாரித்தார். இவர் நடிகர் சூர்யாவின் உறவினர் என்று கூறப்படுகிறது. சூர்யாவின் தம்பியான கார்த்திதான் பருத்தி வீரன் படத்தின் நாயகன். பிரியா மணி நாயகியாக நடித்திருந்தார்.



இப்படத்தின் தயாரிப்பின்போது ஞானவேல்ராஜாவுக்கும், அமீருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக திரையுலக அளவில் பஞ்சாயத்து பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் பருத்தி வீரன் படத்தின் கன்னட, தெலுங்கு மொழி உரிமையை விற்கக் கூடாது என்று ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் அமீர்.



அந்த வழக்கு விசாரணையின்போது ரூ. 50 லட்சம் உத்தரவாதத் தொகையை டெபாசிட் செய்வதாக ஞானவேல்ராஜா தெரிவித்தார். இதுதவிர இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்படுவுதாகவும், பட உரிமையை விற்பதற்கு தடை விதிக்கக் கூடாது என்றும் கோரினார். இதை ஏற்ற நீதிபதி சந்துரு, அமீர் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.



இதை எதிர்த்து டிவிஷன் பெஞ்ச் முன்பு அமீர் அப்பீல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், அக்பர் அலி ஆகியோர், பருத்தி வீரன் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட உரிமை விற்கப்பட்டு விட்டதா என்பதை தெரிவிக்குமாறு ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment