Wednesday, June 16, 2010

'அசின் போகட்டும்... அப்படியே 'போய்விடட்டும்'!


சல்மான்கான் மேலுள்ள ஈர்ப்பு, இந்திப் பட வாய்ப்பு போன்றவற்றால் இலங்கை போவதில் உறுதியாக நிற்கும் அசினுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன.

தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கையில் இந்திய திரைப்பட விழாவை நடத்த தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவ்விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என நடிகர்-நடிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி ஹிரித்திக்ரோஷன், சல்மான்கான் உள்ளிட்ட நடிகர்கள் சிலர் பங்கேற்றனர்.

இதையடுத்து ஹிரித்திக் ரோஷனின் கைட்ஸ் படம் சென்னை உள்ளிட்ட தென்மாநில தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டது.

சல்மான்கான் தற்போது 'ரெடி' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவரது ஜோடி அசின்.

'ரெடி' படப்பிடிப்பை இலங்கையில் நடத்தும்படி சிங்கள அரசு சல்மானுக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து மொரீசியசில் நடைபெறுவதாக இருந்த இதன் படப்பிடிப்பு இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இலங்கை படவிழாவில் பங்கேற்றதால் சல்மான்கான், படப்பிடிப்புக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க இலங்கை அரசு முன் வந்துள்ளது.

இதற்கிடையில் சல்மான்கான் ஜோடியாக இப்படத்தில் நடிக்கும் அசினுக்கு தென்னகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் விசி குகநாதனிடம் இதுபற்றி கேட்டோம். அவர் கூறுகையில்,"அசின் போவது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவலில்லை. அவர் வெளிப்படையாக அறிவிக்கும் பட்சத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர் தப்ப முடியாது" என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி கூறுகையில், "தமிழருக்கு ஒரு நீதி, அரசியல் தீர்வு, அமைதியான வாழ்க்கை கிடைக்கும் வரை இலங்கையில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். இதை மீறி அங்கு நடக்கும் படப்பிடிப்பில் அசின் கலந்து கொள்வதாக இருந்தால், தாராளமாகப் போகட்டும்... அப்படியே போய்விடட்டும்" என்றார் கோபத்துடன்.

இதையெல்லாம் தாண்டி 'ரெடி' படம் தயாரானாலும் 5 மாநிலங்களில் திரையிடப்பட மாட்டாது என முன்பே தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்து.

இந்த படத்தில் நடிப்பது குறித்து அசினிடம் கேட்டபோது, "இலங்கை படவிழாவில் பங்கேற்கும்படி எனக்கும் அழைப்பு வந்தது. ஆனால் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காக அந்த விழாவுக்கு செல்லாமல் புறக்கணித்தேன். ஆனால் 'ரெடி' படத்தில் நடிப்பதற்கு என்னை தயாரிப்பாளர்தான் ஒப்பந்தம் செய்துள்ளார். அவருடைய படத்தில் நடிக்க நான் கால்ஷீட் கொடுத்துள்ளேன். அதை மீற முடியாது" என்றார்.

No comments:

Post a Comment