Tuesday, June 22, 2010

ராவணன் ராமாயணம் அல்ல..! - மணிரத்னம்


ராவணன் படம் ராமாயணத்தின் தழுவல் அல்ல. ராமாயணத்தின் ஒரு சில விஷயங்கள் இடம்பெற்றிருக்கலாம், என்றார் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கிய ராவணன் படம் தமிழ், இந்தியில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் கதை ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழில் ராமன் கேரக்டரில் பிருதிவிராஜும், ராவணன் பாத்திரத்தில் விக்ரமும், சீதை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும், கார்த்திக் அனுமனாகவும், பிரியாமணி சூர்ப்பனையாகவும் நடித்துள்ளனர். கதையின் போக்கும் ராமாயணத்தை மறுபதிப்பு போலவே உள்ளது. பல காட்சிகளில் சந்தன காட்டு வீரப்பன் கதையின் சாயலும் இந்தப் படத்தில் உள்ளது.

கிளைமாக்ஸில் ராமனாக வரும் பிருதிவிராஜ் வில்லனாகவும், ராவணனாக வரும் விக்ரம் ஹீரோவாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது வட இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்காக எந்த கிளர்ச்சியும் நடந்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார்.

அவர் கூறியது:

"முரட்டுத்தனமாகவும், வில்லத்தனமாகவும் தெரியும் ஒருவன் மனதில் அன்பு, பாசம், காதல் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை தற்போதைய உலகில் பரவலாக காண முடிகிறது. எனவேதான் அதுபோன்ற கேரக்டருக்கு ராவணன் பெயர் வைத்தேன். பத்து தலை மாதிரி அவனுக்குள் பல குணங்கள் இருக்கலாம். ஆனாலும் உள்ளுக்குள் அவனும் ஒரு இயல்பான மனிதனே.

இது ராமாயணத்தின் தழுவல் அல்ல. ராமாயணத்தில் உள்ள ஒருசில விஷயங்கள் இப்படத்தில் இருக்கலாம். ஆனால் இது ராமாயணம் அல்ல.

ராவணன் படத்தில் எல்லோருமே சிரமப்பட்டு நடித்தனர். இந்தியில் இன்னொருத்தர் மனைவியான ஐஸ்வர்யாவை அபிஷேக்பச்சன் கடத்துவது போன்று கதையை அமைத்திருப்பதை ரசிகர்கள் ஏற்பார்களா என்ற கேள்விக்கே இடம் இல்லை.

திரையில் பார்க்கும்போது கேரக்டர்களில் மூழ்கி விட்டால் அவர்களின் நிஜவாழ்க்கை மனதில் எழாது. படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு உள்ளது", என்றார்.

இந்தப் படம் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாக அமிதாப் கூறியிருந்தாரே என்ற கேள்விக்கு மணிரத்னம் பதில் சொல்லவில்லை.

No comments:

Post a Comment