Friday, June 25, 2010
ஜாக்ஸன் முதலாமாண்டு அஞ்சலி... ரசிகர்கள் கண்ணீர்!
பாப் இசையின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்ஸனின் முதல் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பதில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. மரணமடைந்த அவரது உடலை புதைத்து, மீண்டும் எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்து, 70 நாட்கள் அலைக்கழித்த பிறகு அடக்கம் செய்தனர்.
அதே நேரம் இந்த இழப்பைத் தாங்க முடியாமல் உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரத்தில் குலுங்கினர்.
மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்து இன்றுடன் சரியாக ஓராண்டு ஆகிறது. இதையொட்டி உலகம் முழுக்க உள்ள பாப் இசை ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பல நகரங்களில் அவரை நினைவு கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
மைக்கேல் ஜாக்சனை கவுரவிக்கும் வகையில் மேடம் டுஸ்ஸாட் அருங்காட்சியகம் உலகம் முழுக்க 9 இடங்களில் மைக்கேல் ஜாக்சன் மெழுகுப் பொம்மைகளை வைத்துள்ளது. அந்த மெழுகுப் பொம்மை கண்காட்சியை பார்க்க மக்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த மெழுகு பொம்மை கண்காட்சி அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரியின் குற்றச்சாட்டு!
இதற்கிடையே மைக்கேல் ஜாக்சனின் சகோதரி லடோயா நேற்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மைக்கேல் ஜாக்சன் இயற்கையாக மரணம் அடையவில்லை. அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "என் சகோதரர் உயிர் வாழ்வதை விட இறந்தால்தான் நிறைய லாபம் கிடைக்கும் என்று ஒரு கூட்டம் நம்பியது. அவர்கள்தான் சதி செய்து மைக்கேல் ஜாக்சனைக் கொன்று விட்டனர். இதில் எனக்கு சந்தேகமே இல்லை", என்றார்.
மைக்கேலே ஜாக்ஸன் மரணம் குறித்து கடந்த ஓராண்டாக பல பரபரப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment