Wednesday, June 30, 2010

கமல்ஹாசன் நினைவுகள் பட விழா-டெல்லியில் ஜூலை 2ல் வழா



திரையுலகில் பொன் விழா கண்டுள்ள கமல்ஹாசனைப் போற்றும் வகையில், கமல்ஹாசன் நினைவுகள் என்ற பெயரில் பிரமாண்ட விழாவை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் எடுக்கிறது. ஜூலை 2ம் தேதி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் மாலை 6.30 மணிக்கு இந்த விழா தொடங்குகிறது. 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.



விழாவின் தொடக்கமாக ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. தொடர்ந்து அன்பே சிவம், விருமாண்டி, தேவர் மகன், சாகர சங்கமம், தசாவதாரம் மற்றும் நாயகன் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.



இதுதொடர்பாக தகவல் ஒலிபரப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4 வயதில் நடிக்க வந்து தற்போது 55 வயதாகியும் தொடர்ந்து பிரகாசமான முறையில் நடித்துக் கொண்டிருக்கும் நிகழ்வு என்பது மிகவும் அரிய ஒன்ராகும். உலக நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்படும் கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா படம் மூலமாக தனது 4வது வயதில் 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி நடிக்க வந்தார்.



அதன் பின்னர் 200க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதினைப் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை முழுவதும், நல்ல திரை ரசிகராகவும் இருந்து வருகிறார்.



அவர் இந்தியத்திரைப்படத்துறைக்கு ஆற்றி வரும் பணியைக் கெளரவித்து பாராட்டும் வகையில், 1990ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.



கமல்ஹாசன் இதுவரை 4 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், 5 தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள், 3 நந்தி விருதுகள் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.அவர் நடித்த மூன்றாம் பிறை, நாயகன், சிகப்பு ரோஜாக்கள், தேவர் மகன், சாகர சங்கமம், சாகர், சத்மா, விருமாண்டி உள்ளிட்ட திரைத் துறைக்கு கமல்ஹாசன் அளித்த சிறந்த படைப்புகளில் சில.



1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் அவரது நடிப்பை டைம் பத்திரிக்கை வெகுவாக பாராட்டியிருந்தது.



கடந்த 50 வருடங்களாக திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பணியாற்றி வரும் கமல்ஹாசனின் சேவைகளைப் பாராட்டி மத்திய திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் 3 நாள் கமல்ஹாசன் திரைப்படங்களின் நினைவுகள் என்ற பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



விழாவை அமைச்சர் அம்பிகா சோனி தொடங்கி வைக்கிறார். கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.



இந்த விழாவுக்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment