Thursday, June 24, 2010

கேரளாவில் திரையரங்குகள் மூடல்-புதுப்பட ரிலீஸ் நிறுத்தம்!


சினிமா வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் புதிய சினிமா படங்கள் திரையிடுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரள திரையரங்குகளில் தினசரி 3 காட்சிகளுக்கு பதில் 4 காட்சிகள் திரையிட வேண்டும், விளம்பரத்துக்கு ஆகும் செலவை திரையரங்க உரிமையாளர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும், போன்ற கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கம் விடுத்துள்ளது.

இந்த கோரிக்கைகளை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதன் காரணமாக திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதன் காரணமாக நேற்று 48 வினியோக மையங்களை சேர்ந்த 200 திரையரங்குகளுக்கு புதிய சினிமா படங்களை கொடுப்பதில்லை என்று வினியோகஸ்தர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் புதிய படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

'புதிய படங்களையோ, பழைய படங்களை மீண்டும் திரையிடவோ கொடுக்க மாட்டோம்' என்று வினியோகஸ்தர்கள் சங்க செயலாளர் ஜோசி சி.முன்டாடன் தெரிவித்தார்.

'வினியோகஸ்தர்களின் இந்த திடீர் முடிவால் திரையரங்க உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவோம். புது முகங்களை வைத்து தயாரிக்கப்பட்ட 'நல்ல பாட்டுக்காரன்' என்ற படம் இன்று வெளியாக வேண்டும். இந்த நிலையில் புதிய படங்களை தரமாட்டோம் என்று வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளதால், நிலைமை பற்றி ஆராய வியாழக்கிழமை (இன்று) கமிட்டி கூட்டம் நடக்கிறது' என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் எம்.சி.பாபி தெரிவித்தார்.

இந்த மோதல் காரணமாக மோகன்லால் நடித்த 'ஒரு நாள் வரும்' என்ற படமும், ஜெயசூர்யா நடித்த 'நல்லவன்' படமும் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது.

No comments:

Post a Comment