Wednesday, June 16, 2010

முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!!


சென்னை: எழுத்துத் துறையில் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு அண்ணா விருதினை வழங்குகிறகு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.

இந்த அமைப்பின் ஒரு அங்கமான திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி விழா நடக்கிறது.

அகில இந்திய திரைப்பட சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் ஃபெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அகில இந்திய திரைப்பட சம்மேளன நிர்வாகிகள் கலந்துக் கொண்ட கூட்டம் தர்மேஷ் திவாரி தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த திரை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தியாவில் மற்ற தொழில்களில் இருக்கும் 8 மணி நேரம் என்ற வேலை நேர அளவைப் போல், சினிமா தொழிலுக்கும் 8 மணி நேரம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வை 10 சதவீதத்திலிருந்து கூடுதலாக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு தலைமையைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்திய அளவில் எழுத்தாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை சென்னையில் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள்.

ஜனவரி மாதம் இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையடுத்து வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் வரும் நிதியை திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்", என்றார்.

No comments:

Post a Comment