பெங்களூர்: கர்நாடக திரைத்துறையின் கட்டுப்பாட்டை மீறி அதிக திரையரங்குகளில் ராவணன் படத்தை வெளியிட்டதைக் கண்டித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
விக்ரம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் நடித்த ராவணன் திரைப்படம் கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கர்நாடகத்திலும் இந்த திரைப்படம் இந்தி மற்றும் தமிழ் மொழியில் வெளியானது.
கர்நாடகத்தில் கன்னட மொழி அல்லாத பிறமொழி படங்கள் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் 21 தியேட்டர்களில் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்று கர்நாடக சினிமா வர்த்தக சபை விதி உள்ளது.
இந்த விதியை எதிர்த்து டெல்லியில் உள்ள இந்திய போட்டிகள் ஆணையத்திடம் (சி.சி.ஐ.) ராவணன் திரைப்படத்தின் வினியோகஸ்தர் மனுதாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ராவணன் திரைப்படத்தை கர்நாடகத்தில் 21க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடுவதைத் தடுக்கும் கர்நாடக சினிமா வர்த்தக சபையின் விதிக்கு தடை விதித்து சி.சி.ஐ. உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் 36 திரையரங்குகளில் ராவணன் படம் வெளியிடப்பட்டது.
இந் நிலையில் சி.சி.ஐ. உத்தரவை எதிர்த்து கர்நாடக சினிமா வர்த்தக சபை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பைரே ரெட்டி, விசாரணையை ஜுன் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
No comments:
Post a Comment