Wednesday, June 16, 2010
இலங்கைக்கு போகிறாராம் அசின்!
சல்மான் கானுடன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு க்காக இலங்கைக்குப் போகிறாராம் நடிகை அசின்.
தமிழனின் ரத்தக் கறைப் படிந்த இலங்கையில் இந்திய திரைப்படங்கள் தொடர்பான எந்த நிகழ்வும் இருக்கக்கூடாது; போர்க்குற்றம் செய்த ராஜபக்சேக்கு அதன் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கிலும், அங்குள்ள தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திட அழுத்தம் தர வேண்டும் என்பதற்காகவும் தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு சில அதிரடி முடிவுகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியே கொழும்பில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா புறக்கணிப்பு.
இந்தியாவின் பெரும்பாலான நட்சத்திரங்கள் இந்த முடிவுக்கு கட்டுப்பட்டனர். ஆனால் சல்மான்கான், விவேக் ஓபராய், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோர் இதையும் மீறி கொழும்பு போய் கூடிக் குலாவினர். இன்னும் கூட இலங்கையை விட்டு சல்மானும் விவேக் ஓபராயும் திரும்பவில்லை. இவர்களின் படங்களை தென்னகத்தின் 5 மாநிலங்களில் தடை செய்துள்ளது கூட்டமைப்பு.
அடுத்த கட்டமாக, இலங்கையில் எந்த படப்பிடிப்பும் நடத்தக் கூடாது என கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதை முன்னிறுத்தி கவிஞர் தாமரை, இயக்குனர் சீமான் உள்ளிட்டோர் பெரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், சல்மான் கான் தனது அடுத்தப் படத்தின் ஷூட்டிங்கை இலங்கையில் நடத்தத் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தின் நாயகி அசின். இங்கே விஜய்யின் காவல்காரன் படப்பிடிப்பை முடித்த கையோடு, இந்திப் படத்துக்காக இலங்கை செல்லப் போகிறாராம்.
இந்த செய்தி கேட்டதும் பெரிதும் அதிருப்திக்குள்ளானவர் விஜய்தான். இலங்கை தமிழர்கள் மத்தியில் விஜய்யின் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யும் ஈழத் தமிழர் போராட்டங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறார்.
காவல்காரன் படம் ஆகஸ்டில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அசின் இலங்கைக்குப் போவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து, அவரைத் தடுக்கும் முயற்சியில் உள்ளாராம்.
இதற்கிடையே, விஷயமறிந்த தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அசின் மீது கடும் கோபத்தில் உள்ளது. 'தமிழ்ப் படங்கள் மூலம் உயர்ந்த நடிகை அசின், தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பின் முடிவை மீறி இலங்கை செல்வதா... இந்தியில் விழுந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த அவர் மீண்டும் வந்தது தமிழ் சினிமாவுக்குதான் என்பதை மறந்துவிட்டாரே...' என கேட்டுள்ளனர் நிர்வாகிகள்.
அசினுக்கோ, சல்மான் பட வாய்ப்பை விட மனசில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை வைத்து மீண்டும் பாலிவுட்டில் காலூன்ற முயற்சிக்கிறாராம். எனவே யார் தடுத்தாலும், இலங்கைக்குப் போவது என்ற உறுதியில் உள்ளாராம்.
எதுக்கும் ஜெனிலியாவோட அனுபவத்தை கேட்டு தெரிந்து வைத்துக் கொள்ளட்டும் அசின்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment