Tuesday, June 22, 2010

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை! ஸ்னேகா


பட்டப் பெயர்கள் இல்லாத நடிகர்களை கோலிவுட்டில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நடிகர்ளுக்கும் பட்டப் பெயர் சூட்டுவதில் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் அலாதி ஆர்வம்.

அந்த வகையில் இப்போது நடிகை ஸ்னேகாவுக்கு புதிதாக 'புரட்சி நாயகி' என பட்டப் பெயர் சூட்டியுள்ளனர். பவானி ஐபிஎஸ் படத்திலிருந்து இனி 'புரட்சி நாயகி' ஸ்னேகா என்றே அழைக்கப்படுவாராம்.

நடிகைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே 'புரட்சித் தலைவி' என்று அழைக்கப்பட்டார். அவருக்குப் பிறகு புரட்சி என்ற அடைமொழியை ஸ்னேகாவுக்கு சூட்டியுள்ளனர்.

விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐ.பி.எஸ். படம்தான் இப்போது பவானி ஐபிஎஸ்ஸாக தயாராகிறது.

இந்தப் படத்தில் விஜயசாந்தி நடித்த பிறகுதான் அரசியலில் குதித்தார். ஸ்னேகாவுக்கும் அப்படி ஏதும் எண்ணமிருக்குமோ?

இதுபற்றி அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, "எனக்கு 'புன்னகை இளவரசி' பட்டம் சூட்டியது ரசிகர்கள்தான். அவர்கள் மனது புண்படக் கூடாது என்று ஏற்றேன். இந்தப் படத்தில் எனது கேரக்டருக்காக 'புரட்சி நாயகி' என்று பெயர் வைத்துள்ளார்கள். ரசிகர்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கு இதில் ஆட்சேபணையில்லை.

இப்படி பட்டப் பெயர் வைத்ததால் அரசியலுக்கு வருவீர்களா என்று பலரும் கேட்கிறார்கள். நான் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டேன்.

பவானி படத்தில், ஆக்ஷன் வேடத்தில் நடிக்க இயக்குநர் கிச்சா அழைத்தார். ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க முடியுமா? என சந்தேகம் எழுந்தது. கிச்சா உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி நடித்தேன்.

பிறகு போலீஸ் உடையில் எனது படங்களை பார்த்த பிறகு நம்பிக்கை வந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் அளித்த பயிற்சியும் என்னை முழுமையாக அதில் ஈடுபட்டு நடிக்க வைத்தது.

ஆக்ஷன் வேடத்திலும், குடும்ப பாங்கான வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.

No comments:

Post a Comment