Tuesday, June 15, 2010

'தமிழர் மனதைப் புண்படுத்தக் கூடாதே என்பதால் ஐஃபா விழாவுக்குப் போகவில்லை!' - மாதவன்



சென்னை: இலங்கை யில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நான் நடித்த 3 இடியட்ஸ் படத்துக்கு ஏராளமான விருது கிடைத்தும் நான் அந்த விழாவுக்குப் போகவில்லை. தமிழர் மனதை புண்படுத்தக் கூடாது என்பதாலேயே நான் போகாமல் இருந்துவிட்டேன், என்கிறார் மாதவன்.



இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள எதிர்ப்பு கிளம்பியது.



தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர் பெப்சி உள்ளிட்ட தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் இலங்கை பட விழாவுக்கு நடிகர், நடிகைகள் போகக் கூடாது என்றும் மீறி கலந்து கொள்வோருக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்றும், எச்சரிக்கை விடுத்தன. அமிதாப்பச்சன், கமல் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடந்தன.



முன்னணி நடிகர், நடிகைகளும் இவ்விழாவுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். ரஜினி, கமல், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் உள்பட பலர் விழாவுக்கு செல்லவில்லை. தடையை மீறி கலந்து கொண்ட ஹிருத்திக்ரோஷனின் 'கைட்ஸ்' படம் சென்னை தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது.



விவேக் ஒபராய் எச்சரிக்கையை மீறி இலங்கை படவிழாவில் பங்கேற்றார். எனவே சூர்யாவுடன் அவர் இணைந்து நடித்து வரும் ரத்த சரித்திரம் படம் தமிழில் வெளியாவது கேள்விக்குறியாகியுள்ளது.



மாதவன் நடித்த 3 இடியட்ஸ் படம் இலங்கை பட விழாவில் 16 விருதுகளைப் பெற்றது. ஆனாலும் மாதவன் விழாவில் கலந்து கொள்ளவில்லை.



இது குறித்து அவர் கூறுகையில், "இலங்கை பட விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று என் இணையதள முகவரிக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன. நான் அரசியலுக்குள் போக விரும்பவில்லை.நான் அரசியல்வாதியும் அல்ல. ஏற்கனவே விடுதலைப் புலிகளை மையமாக வைத்து கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படம் வந்தது. மணிரத்னம் மீதுள்ள பிரியத்தால் அப்படத்தில் நான் நடித்தேன்.



தற்போது தமிழ் ரசிகர்கள் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காக இலங்கை பட விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தேன்...," என்றார்.

No comments:

Post a Comment