Saturday, June 26, 2010

சென்னை..30 குறும்படம் எடுக்கும் கமல்!



பெரும் படங்களுக்கு தற்காலிக விடை கொடுத்து குறும்படங்கள் தயாரிக்கப் போகிறார் கமல்ஹாசன்.



சென்னை மாநகரைப் பற்றி பலவித கோணங்களில் பல படைப்பாளிகளின் பார்வைகளைப் பதிவு செய்யும் பொருட்டு 30 குறும்படங்களைத் தயாரிக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.



சமீபத்தில் சென்னை ஐஐடியுடன் இணைந்து திரைக்கதை பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினார் நடிகர் கமல்ஹாசன்.



இந்தப் பட்டறையில் 250 இளம் படைப்பாளிகள் மற்றும் துணை இயக்குநர் கள் பங்கேற்றனர். ஒரு வார கால பயிற்சியின் நிறைவில், படைப்பாளிகள் இனி குறும்படங்களை எடுத்து அவற்றை வெளியிட யு ட்யூப் போன்ற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.



அதை நடைமுறைப்படுத்தும் வகையில் இப்போது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் கமல். சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரான்ஸின் பிரபல திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது பெற்றவருமான ஜீன் க்ளாட் கேரியருடன் கலந்து கொண்ட கமல், தனது திட்டம் குறித்து கூறியதாவது:



சென்னை நகரம் அன்றைக்கும் இன்றைக்கும் பல செய்திகளைச் சொல்லும் விஷயமாகவே எனக்குப் படுகிறது.



முன்பு சென்னையில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்குள் பல நினைவுகள் வந்து போகின்றன. முன்பு அண்ணாசாலையில் ஸ்பென்ஸர் பிளாஸா (பழைய கட்டிடம்), ஹிக்கின் பாதம்ஸ் என சுதந்திரமாக நடந்தே செல்ல முடியும். ஆனால் இனி அது சாத்தியமா என்று தெரியவில்லை. அவ்வளவு மாற்றங்களை இந்த நகரம் சந்தித்துள்ளது.



இந்த குறும்பட முயற்சி வெறும் வணிக நோக்கத்தில் எடுக்கப்படுவதல்ல. அதேபோல பல பெரிய, சிறிய இயக்குநர்களின் பங்களிப்பும் உள்ளது. ஹரிஹரன், சேகர் குப்தா போன்ற ஜாம்பவான் இயக்குநர்களும், என்னைப் போன்ற சிறிய இயக்குநர்களும் இந்த குறும்படங்களை உருவாக்கவிருக்கிறோம்.



மேலும் எங்கள் பயிற்சிப் பட்டறைக்கு வந்த 250 பேரில் 60 பேரைத் தேர்வுசெய்து, அவர்களில் 30 பேரை இறுதி செய்து இந்த குறும்படங்கள் இயக்கும் வாய்ப்பைத் தந்துள்ளோம்.



இந்தப் படங்களைத் தயாரிக்கவே ராஜ்கமல் குறும்பட தயாரிப்புப் பிரிவையும் துவக்கியுள்ளோம், என்றார் கமல்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரெஞ்ச் இயக்குநர் ஜீன் கிளாட் கேரியர் கூறுகையில், இந்தியா என்றாலே அதன் தென் மாநிலங்கள்தான் கலாச்சார சிறப்பில் முதலிடத்தில் நிற்கின்றன. குறிப்பாக சென்னை மறக்கமுடியாத அற்புதமான நகரம். இந்த நகரம்தான் பல கலாச்சார சிறப்பு மிக்க கலைகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது. இந்த சிறப்பான நகரம் பற்றிய அழுத்தமான பதிவுகளாக இந்த 10 நிமிட குறும்படங்கள் அமையும், என்றார்.



கமல்ஹாசனின் லட்சியப் படமான மருதநாயகத்தின் திரைக்கதை வடிவமைப்பில் பெரும் உதவி புரிந்தவர் ஜீன் கிளாட் கேரியர் என்பது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment