Tuesday, June 22, 2010

ராவண்: அமிதாப் கடும் விமர்சனம்... விக்ரம், சந்தோஷ் சிவன் பதில்!


மும்பை: ராவண் படம் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது... படத்தின் கதாநாயகன் பாத்திரம் எப்போதும் குழப்பமாகவே காட்சி தருகிறது, என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

ராவணன் படம் இந்தியில் ராவண் ஆக வெளியாகியுள்ளது. அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து அமிதாப்பச்சன் அதிருப்தி அடைந்துள்ளார். தனது மகன் அபிஷேக் பாத்திரம் தொடர்புடைய முக்கிய காட்சிகள் வெட்டி எறியப்பட்டுள்ளதால் குழப்பம் உள்ளதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராவண் படத்தின் சிறப்புக் காட்சி லண்டனில் நடந்தது. இந்த காட்சியை அமிதாப்பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், விக்ரம், ஷாருக்கான் உள்ளிட்டோர் பார்த்தனர். படம் குறித்து அமிதாப் பச்சன் ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"ராவண் படமாக்கப்பட்ட விதம் ஒரு பெரிய ஆச்சர்யம். இந்தப் படத்தைப் பார்த்தது ஒரு அற்புதமான அனுபவம்.

மணிரத்னம் இந்திய சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. காட்சிகளில் அவரது அணுகுமுறை, அவரது மனம், அவரது அறிவு, பல்வேறு கதைக் களங்களை வெளிக்கொண்டு வருவதில் அவரது கெட்டிக்காரத்தனம் தனித்துவம் மிக்கது. அவரது படைப்புகள் உற்சாகம் தருபவை.

ஆனால் ராவண் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. 10 தலை ராவணனை கண் முன் நிறுத்துவதற்காகத்தான் அபிஷேக் பாத்திரம் பலவித குணங்கள் கொண்டதாக சித்தரிக்கப்பட்டது. கடைசியில் அவன் ஒரு உறுதியான முடிவுக்கு வரும்போது, அந்த பத்துத் தலைகளும் (குணங்களும்) உதிர்ந்துபோய் ஒற்றைத் தலை நிற்கும்.

ஆனால் அதற்கான காட்சிகள் இப்போது படத்தில் இல்லாததால் அபிஷேக்கின் கதாபாத்திரமான வீரா எப்போதும் குழப்பமாகவே காட்சி அளிக்கிறது. இதுவே படத்துடன் ஒன்ற விடாமல் செய்துவிட்டது..," என தெரிவித்துள்ளார்.

'எடிட் செய்வது இயக்குநரின் உரிமை'!

அமிதாப்பின் இந்தக் கருத்துக்கு உடனடியாக பதில் அளித்துள்ளார் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

"எல்லோருக்கும் அவரவர் கருத்துக்களை தெரிவிக்கிற உரிமை உள்ளது. தெற்கே மிகப் பெரிய வெற்றி கண்டுள்ள ராவணன் படம் பற்றி, ஒரு மாறுபட்ட கோணத்திலான கருத்தை அமிதாப் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் எதையெல்லாம் வெட்டி எறிவது என்பது ஒரு படத்தின் இயக்குனரின் பிரத்யேக உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது,'' என்றார்.

ரசிகர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்....

அமிதாப் கருத்துக்கு ராவணன் தமிழ்ப் படத்தின் கதாநாயகன் விக்ரமும் பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, "நான் அமிதாப்பச்சனை மதிக்கிறேன். மணி ரத்னம் சாரையும் மதிக்கிறேன். இது அவர்களுக்கிடையேயான பிரச்சினை. அதில் நான் கருத்து சொல்ல முடியாது.

அதே நேரம் இது தொடர்பாக 100 விதமான கருத்துக்கள் வரலாம். சிலர் நன்றாக இருக்கிறது என்கிறார்கள். சிலர் மோசமாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்..." என்றார்.

No comments:

Post a Comment