Sunday, August 22, 2010

மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-அசின்


மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை என்று கூறியுள்ளார் நடிகை அசின்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என் கவனத்துக்கு வந்தன. அந்த தீர்மானங்களை மனதார வரவேற்கிறேன்.

நான் ஒரு நடிகை தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றேன். நடிகர் சங்கத்தலைவரிடம் எனது நிலைப்பற்றி ஏற்கனவே விளக்கி விட்டேன். இலங்கை சென்றதற்காக என்னை பலர் விமர்சித்தனர்.

நடிகர் சங்க பொதுக்குழுவில் தனிப்பட்ட முறையில் இலங்கை செல்லும் கலைஞர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் போட்டது ஆறுதலாக உள்ளது.

இனிமேல் இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இனி நடிகர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்ல மாட்டேன்.

நடிகர் சங்கத்தினரை எதிர்ப்பது போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லாததை செய்தியாக வெளியிடுவது முறையல்ல என்று கூறியுள்ளார் அசின்.

மன்னிப்பு கேட்க, நான் என்ன தவறு செய்தேன் என்று தனது முந்தைய பேட்டியின்போது அசின் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தயாரிப்பாளர் சங்கம் இன்று முடிவு

இதற்கிடையே, இன்று மாலை நடைபெறும் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் அசின் விவகாரம் குறித்து முக்கியமாக பரிசீலிக்கவுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூன்றாவது முறையாகவும் ராம.நாராயணன் கடந்த 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது குரூப்பைச் சேர்ந்தவர்கள் பிற பொறுப்புகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

இதையடுத்து இன்று மாலை சங்க கட்டடத்தில் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர். அதில் முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கப் போகிறார்களாம்.

குறிப்பாக அசின் குறித்துப் பேசப் போகிறார்களாம். இலங்கைக்கு நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக போகலாமா, கூடாதா என்பது குறித்தும் பேசப்படவுள்ளதாம்.

தயாரிப்பாளர் சங்கம் இதில் ஒரு முடிவு எடுத்த பின்னர் அதை நடிகர் சங்கம் பரிசீலனை செய்யும். அதன் பிறகே அதை ஏற்பது, ஏற்காதது குறித்து நடிகர் சங்கம் தீர்மானித்து பின்னரே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment