Wednesday, August 18, 2010

காமன்வெல்த் போட்டி பாடல் ஏ.ஆர்.ரகுமானுடன் அமைச்சரவை ஆலோசனை



காமன்வெல்த் போட்டிக்கான பாடல் குறித்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் அமைச்சரவை குழு நேற்று இரவு ஆலோசனை நடத்தியது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், அக்டோபர் மாதம் டெல்லியில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பல ஆயிரம் கோடி செலவில் நடந்து வருகிறது. இதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. போட்டிகள் தொடங்க ஒன்றரை மாதமே உள்ள நிலையில் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளன. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், நேற்றுமுன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார்.



அப்போது, போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கேபினட் செயலர் தலைமையில் உயர்மட்ட கமிட்டியை பிரதமர் அமைத்துள்ளார். இந்த கமிட்டிக்கு காமன்வெல்த் ஒருங்கிணைப்பு குழு கட்டுப்பட்டு நடக்கும். மேலும், காமன்வெல்த் போட்டி தொடர்பாக அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தலைமையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவுடன் இந்த கேபினட் செயலர் தலைமையிலான குழு ஒருங்கிணைந்து செயல்படும். தினந்தோறும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்த கமிட்டி ஆய்வு செய்யும்.



இந்நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான அமைச்சர்கள் குழு டெல்லியில் நேற்று இரவு ஆலோசனை நடத்தியது. கூட்டத்துக்கு மத்திய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.

காமன்வெல்த் போட்டிக்காக தயாரித்துள்ள பாடல் குறித்து ரகுமான் விளக்கினார். ‘ஜெய் ஹோ’ பாடல் பாணியில் அனைவரையும் கவரும் வகையில் அந்த பாடல் இருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.









No comments:

Post a Comment