Wednesday, August 25, 2010

போதை மருந்து விவகாரத்தில் த்ரிஷாவுக்கு எதிராக ஆதாரம்?


போதை மருந்து வழக்கில் கைதானவரின் போனில் நடிகை த்ரிஷாவின் செல் நம்பர் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து த்ரிஷாவிடம் நேரில் விசாரணை நடத்த ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இது த்ரிஷாவுக்கு திடீர் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள், கோகைன் போதை மருந்து வாங்கும்போது ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போதை கும்பலுடன் பல நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து நடிகர், நடிகைகளை விசாரிக்க ஐதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு தெலுங்கு நடிகர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி தெலுங்கு நடிகர்கள் சங்க தலைவர் முரளிமோகன் கூறும்போது, ‘‘போதை கும்பலுடன் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக சொல்வதில் உண்மையில்லை. இது கலைஞர்களின் இமேஜை கெடுக்கும் விதமாக உள்ளது. தெலுங்கு பட உலகுக்கு எதிராக போலீசார் செயல்படுகின்றனர்’’ என்றார். ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறுகையில், ‘‘போதை மருந்து கும்பலுடன் தெலுங்கு திரையுலகில் அனைவருக்குமே தொடர்பு உள்ளதாக கூறவில்லை. ஆனால் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால் அவர்களை விசாரிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்தாலும் விசாரணை என்று வரும்போது சட்டத்துக்கு கட்டுப்படுவோம் என நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தால் தெலுங்கு பட உலகில் பரபரப்பு நிலவி வருகிறது. விசாரணை பட்டியலில் யார், யார் பெயர் இருக்கிறது, விசாரணையில் சிக்குவோமா என நடிகர், நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் போதை மருந்து வழக்கில் கைதாகியுள்ள நபரின் செல்போனில் த்ரிஷாவின் செல் நம்பர் இடம்பெற்றுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து த்ரிஷாவிடம் போலீசார் நேரடியாக விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கொடைக்கானலில் ‘மன்மதன் அம்பு’ பட ஷூட்டிங்கில் இருந்த த்ரிஷாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: கைதானவரின் போனில் இருப்பது என் நம்பர் இல்லை. அது விசாரணையில் இப்போது தெரியவந்துள்ளது. இதில் எனக்கு தொடர்பு இருப்பதாக புரளி கிளப்புகிறார்கள். இந்த தகவலை பரப்பியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இது தொடர்பாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் கானிடமும் பேசினேன். என்னைப் பற்றி வந்துள்ள வதந்தியை பற்றி தெரிவித்தேன். என்னை போலீசார் விசாரிக்கப்போவதாக சொல்வதில் உண்மையில்லை. இந்தப் பிரச்னையில் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி எனது வக்கீலுடன் பேசி வருகிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார். விசாரணை பட்டியலில் நடிகைகள் காம்னா, மதுஷாலினி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment