
இலங்கை சென்ற விவகாரம் காரணமாக, நடிகை அசின் நடித்துள்ள ‘ரெடி’ என்ற இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று அனைத்து சங்கங்களும் இணைந்த தமிழ் திரையுலக கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது. இதையடுத்து தமிழ் திரையுலகினர் அந்த விழாவை புறக்கணித்தனர்.
‘ரெடி’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் இலங்கையில் நடந்தது. சல்மான்கான் ஹீரோவாக நடிக்க அசின் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இலங்கையில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.
இதையடுத்து அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ் திரையுலகினர் வற்புறுத்தினார்கள். இதுதொடர்பாக நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, ‘நடிகை அசினிடம் இதுபற்றி விவரம் கேட்கப்படும்’ என்று கூறப்பட்டது. இந்நிலையில் ‘ரெடி’ படம் வெளியாவதில் சிக்கல் அதிகரித்துள்ளது. படத்தை வாங்குவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் கூறுகையில், “இலங்கைக்கு தமிழ் திரையுலகினர் யாரும் செல்லக்கூடாது; மீறிச் சென்றால் அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று தமிழ் திரையுலக கூட்டு நடவடிக்கை குழு எடுத்த முடிவு அப்படியே தொடர்கிறது. மீண்டும் அக்குழு கூடி புதிய முடிவு எடுத்தால்தான் இந்த தடை முடிவுக்கு வரும். கடந்த 2 மாதத்திற்கு முன்பு இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் படமான ‘கைட்ஸ்’ இங்கு திரையிடப்பட்டது. அவர் இலங்கை பட விழாவில் கலந்துகொண்டதால் அந்த படம் உடனடியாக நிறுத்தப்பட்டது” என்றார்.
No comments:
Post a Comment