
ஒத்திகை நடத்தாமல் சினிமா எடுப்பது அக்கிரமமான செயல் என்று கமல் ஆவேசத்துடன் கூறினார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் புதிய படம் மன்மதன் அம்பு. கமல் திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கும் இந்தப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். கமலுடன் த்ரிஷா, மாதவன், சங்கீதா ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் அறிமுக விழா சென்னை, ஏவிஎம் ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. இதில் கமல் பேசியது: ஒரு படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் இணக்கமாக இருந்து பணியாற்றினாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும். சிகை அலங்காரம் செய்பவரிடம் தலையை கொடுத்து விட்டால் அவரை முழுமையாக நம்பிக்கொண்டு தலையாட்டாமல் இருக்க வேண்டும். அதுபோல கலைஞர்களை நம்பி பொறுப்பை ஒப்படைத்து விட்டால் தயாரிப்பாளர்கள் அவர்களை சுதந்திரமாக விட்டு விட வேண்டும். இது சாத்தியமில்லாமல் போகும்போதுதான் தயாரிப்பாளர் இயக்குனராகிறார். இயக்குனர், தயாரிப்பாளராகிறார். சினிமா என்பது கூட்டு முயற்சி. சினிமா எடுக்க புறப்படும் முன் ஒத்திகை நடத்துங்கள் என்ற கருத்தை பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதை யாரும் மதிப்பதில்லை. 4 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும் ஒரு நாடகத்துக்கு 40 நாள் ஒத்திகை பார்க்கிறார்கள். ஆனால், 40 கோடி செலவிடும் ஒரு படத்துக்கு 4 நாள் கூட ஒத்திகை பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் படப்பிடிப்பு தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புவது அக்கிரமம், அநியாயம் என்பதைத் தவிர வேறென்ன? அதனால்தான் இந்தப் படத்துக்கு முழு ஒத்திகை நடத்திவிட்டு படப்பிடிப்பிற்கு செல்கிறோம். ஒத்திகை நடத்தி படம் எடுத்தால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். ரசிகனுக்கு நல்ல படம் கிடைக்கும், என்று பேசினார் கமல். உலக நாயகன் சொல்வதும் வாஸ்தவம்தானே!
No comments:
Post a Comment