
நடிகர் கமல் ஹாஸனை கவுரவிக்கும் விதத்தில் டெல்லியில் மத்திய அரசு சிறப்புத் திரைப்பட விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கமல் ஹாஸனின் பொன்விழாவைக் கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி வரும் ஜூலை 2-ம் தேதி திறந்து வைக்கிறார்.
முன்பு சென்னை வந்திருந்த அமைச்சர் அம்பிகா சோனி, கமலை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசே விழா எடுக்கும் என்று கூறியிருந்தார். இப்போது அதை அரசு நிறைவேற்றியுள்ளது.
ஜூலை நான்காம் தேதி வரை டெல்லி ஷ்ரிபோர்ட் அரங்கில் இந்த திரைத் திருவிழா நடக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த விழாவில் மூன்று நாட்களிலும் கமல் ஹாஸன் நடித்த படங்கள் திரையிடப்படும்.
கமல் ரசிகர்களுக்கு இந்த விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம்.
துவக்க நாளில் ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. மேலும் ஏக்துஜே கேலியே, சாகர சங்கமம், நாயகன், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளன.
"கமலஹாசனின் கடந்த கால சினிமா நினைவுகள்" என விழாவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கமலின் பொன்விழா சிறப்பு நிகழ்வை இந்திய அரசு கொண்டாடும் இந்த நேரத்தில், கமல் ஹாஸன் தனது மன்மதன் அம்பு படத்தின் ஷூட்டிங்குக்காக பிரான்ஸ் போயிருக்கிறார். அவரைக் கவுரவிக்க தனியாக பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment