
சென்னை: தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு மற்றும் பிலிம்சேம்பர் விடுத்த வேண்டுகோள் மற்றும் தடை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, ஐஃபா விழாவில் பங்கேற்ற வட இந்திய நட்சத்திரங்கள் அனைவரது படங்களுக்கும் இன்றுமுதல் தடை விதிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர் நடிகைகள் தொடர்புடைய எந்தப் படத்தையும் விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் மாட்டார்கள்.
பெஃப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இலங்கையில் நடைபெறும் படவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தென்னிந்திய திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கேட்டுக் கொண்டன. அதை ஏற்று பலபேர் அவ்விழாவுக்கு செல்லவில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து அமிதாப்பச்சன், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கரெல்லாம் விழாவுக்கு போகவில்லை. தென்னிந்திய சினிமாவின் பிற மொழிக் கலைஞர்கள் ஒருவர் கூட இந்த விழாவுக்குப் போகவில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் வேண்டுகோளை மதிக்காமல் அந்த மயான பூமியில் நடந்த விழாவில் சில சில்லரை நடிகர்-நடிகைகள் பங்கேற்று உள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். சல்மான்கான், விவேக் ஓபராய், பிபாஷா பாசு, ஹ்ரித்திக் ரோஷன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நமது உணர்வுகளை மிதித்துவிட்டு இந்த விழாவில் பங்கெடுத்துள்ளனர். இனி இவர்கள் படங்களை தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் திரையிடமாட்டோம். தொழில் ரீதியான எந்த ஒத்துழைப்பையும் ஃபெப்ஸி வழங்காது. இதில் உறுதியாக உள்ளோம்.." என்றார்.
கைட்ஸ் படக் காட்சிகள் ரத்து:
ஹ்ரித்திக் ரோஷன் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள கைட்ஸ் என்ற இந்திப் படம் சென்னையில் வெளியாகியுள்ளது. சத்யம் உள்ளிட்ட சில திரையரங்குகளில் இந்தப் படம் ஓடுகிறது.
ஹ்ரித்திக் ரோஷன் கொழும்பு விழாவில் பங்கேற்றுள்ளதால், தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு அறிவித்தபடி, இந்தப் படத்தை தியேட்டர்களை விட்டு தூக்க வேண்டும், என 'நாம் தமிழர்' அமைப்பு திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் நோக்கில் இன்று முதல் கைட்ஸ் படம் திரையரங்குகளை விட்டு தூக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment