Thursday, July 8, 2010

வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி-தன்ஷிகா நடிக்கும் அரவான்


பிரபு நடித்த சின்ன மாப்ளை, சரத்குமார் நடித்த அரவிந்தன், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, ஆகிய வெற்றிப் படங்களின் தயாரிப்பாளரும், தற்போது ஜெய் நடிக்கும் கனிமொழி படத்தின் தயாரிப்பாளருமான அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் அரவான் என்ற படம் உருவாகிறது.

வெயில்,அங்காடித்தெரு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் இப்படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் ஆதியும், தன்ஷிகாவும் இணைந்து நடிக்கின்றனர்.

அரவான் என்றால் ஆண்மை மிகுந்தவன், 32 சர்வ லட்சணங்கள் பொருந்தியவன், மாவல்லமை படைத்தவன், இளகிய மனம் கொண்டவன் என்று பொருள் என இயக்குநர் வசந்தபாலன் கூறுகிறார்.

நாயகன் ஆதி, மிருகம், ஈரம் விரைவில் வெளியாகவுள்ள அய்யனார்,ஆடுபுலி படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பேராண்மைத் திரைப்படத்தில் 5 கதாநாயகிகளில் ஒருவராக, சிறப்பாக நடித்த தன்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தில் 2வது நாயகியாக அர்ச்சனா கவி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் பசுபதி நடிக்கிறார்.

உலக சரித்திரத்தில் எங்கும் கலை வடிவமாக பதிவாகாத, புறக்கணிக்கப்பட்ட, தோல்வியுற்றவனின் வாழ்க்கையை வெயில் திரைப்படமாக எடுத்தார் வசந்தபாலன். நூறு நாட்களுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடிய வெயில்,தேசிய விருது, தமிழக அரசு விருது உட்பட 26 விருதுகளைப் பெற்றது. உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.

இந்தியாவின் மிகப் பிரபலமான, பரபரப்பான, வணிக வீதியான ரங்கநாதன் தெருவின் வாழ்க்கையை அங்காடித்தெரு திரைப்படமாக பதிவு செய்தார். பத்திரிகை மற்றும் அனைத்து ஊடகங்களின் பாராட்டையும், பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனையும் வாரிக் குவித்த அங்காடித்தெரு இவ்வாண்டின் ஈடு இணையில்லாத வெற்றியாக நூறு நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்திற்குப் படம் வித்தியாசமான, சுவாரஸ்யமான திரைப்படங்களை இயக்கி வரும் வசந்தபாலன், இம்முறை மிக மாறுபட்ட முயற்சியாக 18ம் நூற்றாண்டின் தமிழக வாழ்க்கையை, கலாச்சாரத்தை, வீரத்தை, காதலை பதிவு செய்யும் முயற்சியாக இப்படம் உருவாகிறது.

இயல்பான கிராமத்து முகங்களை பெருமளவில் நடிகர்களாக்கும் தேடுதல் முயற்சி, நூறு கிராமங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

வெயில் திரைப்படத்தில் பின்னணிப் பாடகர் ஜி.வி பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் வசந்தபாலன். இந்தப் படத்தில் பிரபல பின்னணிப் பாடகர் கார்த்திக்கை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார்.

யாரடி நீ மோகினி, குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சித்தார்த் இப்படத்தின் ஒளிப்பதிவினை செய்கிறார்.

படப்பிடிப்பின் முன் தயாரிப்பு வேலைகள் போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன. மிகப் பிரம்மாண்டமாக, தமிழ் மற்றும் தெலுங்கு என ஓரே நேரத்தில், இரு மொழிகளிலும் பல கோடி ரூபாய் பொருட் செலவில், இதுவரை திரையில் பதிவாகாத, இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் படமாக்கப்பட இருக்கும் இப்படம் இம்மாத இறுதியில் துவங்குகிறது.

No comments:

Post a Comment