Thursday, July 8, 2010
அசினுக்குத் தடை வருமா?
தான் இலங்கைக்குப் படப்பிடிப்புக்குப் போனதற்கு என்ன காரணம் என்பதை விவரித்து நடிகை ஆசின் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குக் கடிதம் எழுதியுள்ளாராம். இதைப் பரிசீலித்துப் பார்த்து நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் பின்னணியில் அங்கு நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு இந்திய நடிகர், நடிகையர்யாரும் போகக் கூடாது என்று ஃபெப்சி மற்றும் தமிழ்த் திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கோரிக்கை வைத்தன.
இதை ஏற்று அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட யாருமே போகவில்லை. அதேசமயம், சல்மான் கான், விவேக் ஓபராய் உள்ளிட்ட சிலர் மட்டுமே விழாவுக்குப் போயிருந்தார்கள்.
தடையை மீறிப் போனவர்களின் படங்களை தென்னிந்தியாவில் திரையிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழ்த்திரையுலகினர் யாரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை, தடை விதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் நடிகை ஆசின் இந்தத் தடையை மீறி தற்போது கொழும்பில் முகாமிட்டு சல்மான் கானுடன் ரெடி இந்திப் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவருக்குத் தடை விதிக்கப்படும் என ராதாரவி அறிவித்தார்.
இதனால் வெகுண்ட ஆசின், நான் மட்டுமா இலங்கைக்குப் போகிறேன். இந்திய கடற்படைத் தளபதி வருகிறார், இந்திய கிரிக்கெட் அணிவருகிறது, சென்னையிலிருந்து விமானங்கள் போகிறது என்று ரமணா ஸ்டைலில் பதிலளித்திருந்தார்.
இதனால் தமிழ்த்திரையுலகினர் மேலும் கோபமடைந்தனர். தனது செயலுக்கு ஆசின் நியாயம் கற்பிக்கப் பார்ப்பதாக கருதிய அவர்கள் தடை போடும் முடிவுக்குக் கிட்டத்தட்ட வந்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆசின் அவசரம் அவசரமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளாராம்.
அதில், இலங்கையில் படப்பிடிப்பை நடத்துவது தயாரிப்பாளரின் முடிவு. அப்படத்தில் நடிக்க நான் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதால் மீறி செயல்பட முடியவில்லை.
எனவே தான் இலங்கை படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நடிகர் சங்கத்தின் முடிவுகளுக்கு எதிராக நான் செயல்படவில்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து நடிகர் சங்கம் விரைவில் கூடி ஆலோசித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
ஆசின் தற்போது விஜய்யின் காவல்காரன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment