Sunday, November 28, 2010
ஆக்ஷன் ஹீரோவாக தொடர்வது ஈசியில்லை
சினிமாவுக்கு வந்து 25 வருடங்களாகி விட்டது. இன்னும் ஒரேமாதிரி நடித்தாலோ அல்லது சண்டை போட்டாலோ, ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும் என்பதால், படத்துக்குப் படம் வித்தியாசம் காட்ட அதிக கவனம் செலுத்துகிறேன். ஆக்ஷன் ஹீரோவாக தொடர்வது அவ்வளவு ஈசியில்லை’ என்கிறார் அர்ஜுன். ‘மாசி’, ‘வல்லக்கோட்டை’, ‘மெய் காண்’ படங்களில் நடித்து வரும் அவருக்கு தீபாவளியன்று ‘வல்லக்கோட்டை’ ரிலீசாகிறது.
மீண்டும் வெங்கடேஷுடன் கூட்டணி?
நல்ல கூட்டணி, தொடர்வது தப்பில்லை. டைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தபோதே வெங்கடேஷை தெரியும். அவரது டைரக்ஷனில் ‘வாத்தியார்’, ‘துரை’ படங்களில் நடித்தேன். இப்போது ‘வல்லக்கோட்டை’, பக்கா கமர்ஷியல் படம். ஆக்ஷன் பார்முலாக்கள் இருந்தாலும், வழக்கம்போல் இருக்காது. கமர்ஷியல் படத்திலும் வித்தியாசம் செய்ய முடியுமா என்று, பரிசோதனை செய்துள்ள படம். ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். எனது படங்களில், ‘மலரே மவுனமா’ மிகப் பெரிய மெலடி ஹிட். இப்போது தினா இசையில், ‘செம்மொழியே செம்மொழியே’ பாடல், மெலடி ஹிட் கிங்காக இருக்கும். ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவும், வெங்டேஷின் இயக்கமும், தயாரிப்பாளர் ராஜாவின் பிரமாண்டமும் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.
சண்டைக்காட்சிகளில் என்ன வித்தியாசம்?
வழக்கமாக வசன காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்கு ரிகர்சல் பார்ப்பார்கள். ஆனால், கிரஹம்பாக்கத்தில் இருக்கும் எனது ஸ்டுடியோவில், ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷின் பயிற்சியில், சண்டைக்காட்சிகளில் என்னென்ன வித்தியாசம் செய்யலாம் என்று பல நாட்கள் ரிகர்சல் பார்த்தோம். எனது படங்கள் என்றாலே, சண்டைக்காட்சிகளை ரசிகர்கள் பெரிதும் விரும்பி ரசிப்பார்கள். நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. ஒரேமாதிரி ஸ்டன்ட் காட்சிகளைப் பார்த்து சலிப்பு ஏற்பட்டிருக்கும். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, மிகப் புதுமையான சண்டைக்காட்சிகளை ‘வல்லக்கோட்டை’யில் கொடுத்துள்ளோம்.
நீங்களும் இயக்குனர் என்பதால், தலையீடு இருக்குமா?
வெற்றிகரமாக ஓட வேண்டும், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்க வேண்டும், நடித்தவர்களுக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்றுதான் ஒரு படத்தை மிகப் பெரிய குழுவாக இருந்து உருவாக்குகிறோம். நானும் இயக்குனர் என்பதால், நான் நடிக்கும் படம் பலவிதங்களில் சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? சம்பந்தப்பட்ட இயக்குனருடன் விவாதித்து, இந்தக் காட்சியை இப்படிப் படமாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்வேன். அதை அவரும் ஒப்புக்கொள்வார். இதனால் எந்தப் பிரச்னையும் வருவது இல்லை. ஒளிப்பதிவாளரிடம், லைட்டிங் இப்படி இருந்தால், நடிப்பவர்களின் முகபாவம் இப்படி வரும் என்று ஆலோசனை சொல்வேன். அப்படித்தான் ஸ்டன்ட் மாஸ்டரிடமும் விவாதிப்பேன். ஸோ, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைத்தால்தான் படம் சிறப்பாக வரும். இதை ‘என் தலையீடு’ என்பதை விட, ‘எனது இன்வால்வ்மென்ட்’ என்று சொல்லலாமே.
பாலிவுட் பயணம்?
இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. நேரம் கிடைக்காததால் தள்ளிப்போகிறது. தமிழில் நான் நடிக்கும் படங்கள், தெலுங்கில் ‘டப்’ ஆகின்றன. அங்கும் என் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
எனக்கு நானே போட்டி : ஸ்ரீகாந்த் தேவா
டபுள்ஸ்’ படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் தேவா, பத்து வருடங்களில் 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது 50வது படம், ‘ஆயிரம் விளக்கு’. தெலுங்கு ‘வெங்கடாத்ரி’ படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான நந்தி விருது வாங்கியுள்ளார். நடிக்க ஏராளமான அழைப்புகள் வந்தாலும், ‘இசைதான் எனது அடையாளம்’ என்கிறார்.
நடிக்க ஏன் தயக்கம்?
இசையை தவிர எதுவும் தெரியாது. ஜெயம் ரவியை வைத்து இயக்கும் புதுப்படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க டைரக்டர் பிரபுதேவா அழைத்தார். மறுத்து விட்டேன். ஒரு பாடலுக்கு இசையமைப்பாளராகவே தோன்றி பாடுவது, ஆடுவது என்றால் சம்மதம். இப்போது அதையும் எதிர்பார்ப்பது இல்லை. இசையில் சாதித்த இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எனது தந்தை தேவா போன்றவர்கள், இசைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர்களை பின்பற்றி, இசைத்துறையில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.
யார் உங்களுக்கு போட்டி?
போட்டியாக யாரையும் நினைப்பது இல்லை. எனது முந்தைய படங்களின் இசையை, நானே அடுத்தடுத்த படங்களில் மெருகூட்ட ஆசைப்படுகிறேன். எனக்கு நான்தான் போட்டி.
ரீமிக்ஸ் பாடலை குறைத்து விட்டீர்களே?
‘காதல் வைபோகமே’ உட்பட நிறைய ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைத்தேன். சில பாடல்களை பாராட்டினர். சில பாடல்கள், கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இனிமையாக இல்லை என்று, ஒவ்வொரு ரீமிக்ஸ் பாடலையும், அதற்கு முந்தைய பாடலுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. ‘கெடுத்துட்டாங்க’ என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறார்கள். அதற்காக பட்ட கஷ்டம், உழைப்பு வீணாகிறது. பழைய இசையமைப்பாளர்களின் ஆசீர்வாதம் இருந்தால்தான், எங்களை போன்றவர்கள் இசைத்துறையில் சாதிக்க முடியும். எனவே, ரீமிக்ஸ் பாடலை குறைத்து விட்டேன்.
ரீ-ரெக்கார்டிங்தானே முக்கியம்?
‘ஈ’, ‘சில நேரங்களில்’, ‘நேபாளி’ போன்ற படங்களில் எனது பின்னணி இசைக்கு பாராட்டு கிடைத்தது. கதையின் சூழலுக்கு ஏற்பத்தான் ரீ-ரெக்கார்டிங் செய்ய முடியும். பாடல் கம்போசிங், கோரஸ், பேக்கிரவுண்ட் மியூஸிக் போன்றவற்றில் இளையராஜாதான் எனது குரு. இப்போது இசையமைக்கும் ‘மறுபடியும் ஒரு காதல்’, ‘முரட்டுக்காளை’, ‘ஆயிரம் விளக்கு’, ‘அவர்களும் இவர்களும்’, ‘அர்ஜுனன் காதலி’, ‘கருங்காலி’, ‘பூலோகம்’ போன்ற படங்களின் பாடல்களிலும், பின்னணி இசையிலும் புதிய ஸ்ரீகாந்த் தேவாவை பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)